ஒர் முஸ்லிம்.. இஸ்லாத்தின் அடையாளம்

இந்த விழாவில் நான் எடுத்து கொண்ட தலைப்பு

ஒரு முஸ்லிம், இஸ்லாத்தின் அடையாளமாக இருக்கிறான்

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ‏
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 33:21)

இந்த திருக்குர்ஆன் வசனத்தின் விளக்கத்தை நீங்க தெரிந்து கொள்ள விரும்பினால் முழுமையாக கேளுங்கள். முதலில் நான் ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்

லண்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம் தான் குடியிருக்கும் இடத்திலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு தினமும் பேருந்தில் பயணம் செய்வார், குடியிருக்கும் இடத்திற்கு புதிதாக வேலை மாற்றலாகி வந்திருந்தார் அவர்.

பேருந்தில் சில நாட்களில் அதிகமான பயணிகள் இருப்பார்கள்; சில நாட்களில் ஒருசிலர் இருப்பார்கள். ஆனாலும் தொடர்ந்து அவர் ஒரே பேருந்தில் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தார்.

சில வாரங்கள் கடந்தன

இந்நிலையில் ஒருநாள் வேலைக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறியவர் கட்டணத்தை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார்; ஓட்டுனர் அவர் தந்த தொகையிலிருந்து தேவையான தொகையை எடுத்துக்கொண்டு மீதி தொகையை கொடுக்கும் போது 20 பென்சை (இங்கிலாந்து நாணயம்) அதிகமாகத் திருப்பிக் கொடுத்தார்.

வாங்கிக்கொண்ட அந்த முஸ்லிமுடைய உள்ளத்தில் சிறிய சலனம் ஏற்பட்டது; அதிகமாக தந்த தொகையை திருப்பித் தருவதா, வேண்டாமா? என்று. ஏனெனில் கட்டணத்தைவிட அதிகத் தொகை அவருக்கு உரியதல்லவே, அதனால் அவர் யோசிக்க ஆரம்பித்தார். திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

பிறகு அவர் மீண்டும் யோசித்தார்: இது சிறிய விஷயம், தொகையும் மிக சிறியது, யாரும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், பேருந்து நிறுவனத்திற்கு இதனால் எந்த இழப்பும் ஏற்படாது; அவர்கள் அதை பொருட்படுத்த மாட்டார்கள், இதை நாமே வைத்துக்கொள்வோம்; நாம் விரும்பாமலே இறைவனால் நமக்கு தரப்பட்ட அருட்கொடை என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார்.

அவர் இறங்கவேண்டிய இடம் வந்தது, அவர் இறங்குவதற்காக முற்பட்ட பொழுது சிறிது யோசித்தார்;

உடனே தன்னிடத்தில் இருந்த அதிகப்படியான 20 பென்ஸ்களை ஓட்டுனரிடம் கொடுத்தார்; மேலும் சொன்னார்: எனக்கு நீர் தர வேண்டியதை விட அதிகமான தொகையை தந்து விட்டீர்; எனவே இதை வாங்கிக் கொள்ளுங்கள்! என்றார்.

தொகையை வாங்கிக் கொண்ட ஓட்டுநர் புன்னகை புரிந்தவாரே அவரிடத்தில் கேட்டார்: நீர்,இந்தப் பகுதியில் புதிதாக வந்த முஸ்லிம் தானே? நான் சிறிது காலமாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உங்களுடைய பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு யோசித்துக் கொண்டிருந்தேன்;

இந்நிலையில் உம்மிடம் தந்த இந்தத் தொகையை நான் அறியாமல் தரவில்லை. ஒரு முஸ்லிமுடைய பண்பு எப்படிப்பட்டது? இந்த பணத்தை பெற்றுக் கொண்ட நீர் எப்படி நடந்து கொள்வீர்? என்பதை நான் அறிய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தந்ததுதான், என்று சொன்னார்.

ஓட்டுனரின் இந்த வார்த்தைகளை கேட்ட பின் பேருந்திலிருந்து இறங்கியவரின் கால்கள் பலவீனமடைந்து, தள்ளாட ஆரம்பித்தன; கீழே விழாமல் இருப்பதற்காக அருகிலிருந்த பேருந்து நிலைய தூணைப் பிடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

அவருடைய கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது; எனக்கு ஏற்பட்ட கைசேதமே! சில நொடிகளில் 20 பென்ஸுக்காக (பணத்துக்காக) எனது இஸ்லாத்தை நான் விற்க இருந்தேனே, இறைவா என்னை காப்பாற்றி விட்டாய் என்று புலம்பி அழுதார்.

(இந்தச் சம்பவம் அரபு பத்திரிகையில் வந்தது,)

இது ஒரு சிறிய சம்பவம்; நம்முடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. இந்த சம்பவத்தின் நாயகர்களாக நாம் இருந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு எளிய உதாரணம் இந்த சம்பவம்.

பல சமயங்களில் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் அறிவதற்கு நாமே காரணங்களாக இருக்கிறோம்;

நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக, முன்னுதாரணமாக இருப்பது கடமை என்பதை இந்தச் சம்பவம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நம்பிக்கையாளர்களாக, உண்மையாளர்களாக நாம் பார்க்கப்படுகிறோம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்பற்ற இஸ்லாத்தை தந்த இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான், என்ற அச்சம் (தக்வா) உணர்வும் நம்மிடம் இருக்க வேண்டும்.

இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள், நயவஞ்சகர்கள், இணைவைப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் இஸ்லாத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்தார்கள் அப்போது இஸ்லாமின் வெற்றி பொருளாதார வளர்ச்சி பெருக்கத்தினாலோ, ஆயுதங்கள், படைகள் மற்றும் போர் சாதனங்கள் ஆகியவை அதிகமாக இருந்ததினாலோ அல்ல. மாறாக, இஸ்லாமியச் சமுதாயத்திடமும் மற்றும் இஸ்லாமில் இணைந்த ஒவ்வொருவரிடமும் இருக்கும் உயர்ந்த பண்புகளும், நற்குணங்களும், முன்மாதிரியான தன்மைகளும்தான் இஸ்லாமின் வெற்றிக்குக் காரணமாக இருக்கின்றன என்று அறிந்து கொண்டார்கள். இந்த அனைத்து தன்மைகளுக்கும் காரணமாகவும் ஊற்றாகவும் விளங்கக்கூடியவர் நபி (ஸல்) அவர்கள்தான் என்பதும் தெரிந்து கொண்டார்கள்.

எனவே நாம் எப்போதும் நபி (ஸல்) அவர்கள் காட்டி கொடுத்த வாழ்க்கையின் அடிப்படையில் முன்மாதிரி முஸ்லிம் முஸ்லிம்களாக வாழ்ந்து காட்டுவோம்.

வாய்ப்பளித்த உள்ளங்களுக்கு ஸலாத்தின் மூலம் நன்றி கூறி விடை பெறுகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

Leave a comment